search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் உறுதி"

    வனங்களை பாதுகாக்க பொதுமக்கள் உறுதி ஏற்க வேண்டும் என நாமக்கல்லில் நடந்த வன உயிரின வார விழாவில் கலெக்டர் ஆசியா மரியம் பேசினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா நடந்தது. விழாவிற்கு நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வன அலுவலர் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி முதல்வர் சுகுணா, விலங்கியல் துறை தலைவர் சர்மிளா பானு ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:-

    வனங்கள், வன உயிரினங்களை அழித்தால் சூழல் சமநிலை பாதிப்பு ஏற்படும். விவசாயத்தில் பெருமளவில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால், பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் திடீர் திடீரென புது விதமான நோய்கள் வருகின்றன. இயற்கையை அழிப்பதால் எதிர்விளைவுகளை சந்தித்து வருகிறோம். வன வளம் சிறப்பாக இருந்தால் தான் மழைப்பொழிவு இருக்கும்.

    வன வளத்தை பாதுகாப்பது வன உயிரினங்கள். இதனால் பொதுமக்கள் ஒவ்வொருவரும் வனம், வன உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தமாட்டோம் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். வனங்களை பாதுகாக்க பொதுமக்கள் உறுதி ஏற்க வேண்டும்.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பேசியதாவது:-

    விலங்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை அதிகம். காவல்துறையை காட்டிலும் வனத்துறைக்கு வன வளங்கள், உயிரினங்களை பாதுகாக்க கூடுதல் அதிகாரம் உள்ளது. வன உயிரினங்களின் வாழ்விடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு அவற்றை துன்புறுத்தும் செயலில் மனிதர்கள் ஈடுபடக்கூடாது.

    தேனீக்கள் அழிந்துபோனால், 20 ஆண்டுகளில் மனித இனமும் அழிந்துபோகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை அனைத்தையும் கவனத்தில் கொண்டு மனிதர்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வன அலுவலர் காஞ்சனா கூறியதாவது:-

    வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான 350 ஏக்கர் நிலம் 600-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வன உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்ததாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து வன உயிரின வார விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் ஆசியா மரியம் பரிசுகளை வழங்கினார். இதில் வனச்சரக அலுவலர்கள் பெருமாள், ரவிச்சந்திரன், அறிவழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    ×